| புஷ்பவனம் குப்புசாமி | |
|---|---|
| இயற்பெயர் | குப்புசாமி |
| பிறப்பிடம் | தமிழ்நாடு, இந்தியா |
| இசை வடிவங்கள் | நாட்டுப்புறப் பாடகர், பின்னணிப் பாடகர் |
| தொழில்(கள்) | பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர் |
புஷ்பவனம் குப்புசாமி என்றறியப்படும் குப்புசாமி ஓர் இந்திய நாட்டுப்புறப் பாடகர் மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகர் ஆவார். தம் மனைவி அனிதா குப்புசாமியுடன் இணைந்து நாட்டுப்புறப் பாடல்கள்[1] என்னும் கிராமியப் பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடவல்லவர்.[2] தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகராகவும் விளங்குகிறார். சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். தமிழக அரசின்கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.[3]
குப்புசாமி தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் இளம் அறிவியலில் விலங்கியல் பட்டம் பெற்றார். பின்னர் குப்புசாமி சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார். இவருக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் இசையில் ஆற்றிய பங்களிப்பிற்காக கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது.
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவர் பாடகியான அனிதாவை மணந்தார்.[2]
இவர் தனது மனைவியுடன் அனிதாவுடன் சேர்ந்து இந்தியாவிலும் வெளிநாட்டிலும் சுமார் 3000 நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.[4] இவர் தனது இசையின் மூலம் சமூக செய்திகளை இணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அறியப்படுகிறார்.[5]
இளையராஜா, வித்தியாசாகர், யுவன் சங்கர் ராஜா, தேவி ஸ்ரீ பிரசாத், ஜி. வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட பல பிரபல இசை அமைப்பாளர்கள் இசையமைத்த திரைப்படப் பாடல்களைப் குப்புசாமி பாடியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் இளையோர் நிகழ்ச்சிகளில் நடுவர்களில் ஒருவராகப் பணியாற்றியுள்ளார் குப்புசாமி.
குப்புசாமியின் பாடல்கள் தமிழ் கலாச்சாரத்தின் படிமங்களை எளிய வார்த்தைகளில் அழகாக வெளிப்படுத்துவதாகவும் அறியப்படுகிறது.[1][6]